×

எதிர்கால தமிழ்நாட்டிற்கான இயற்கையுடன் இணைந்த புதிய வாழ்க்கை முறை உருவாக்க வேண்டும்: நம்மாழ்வார் பிறந்தநாள் விழா கருத்தரங்கில் முடிவு

தஞ்சாவூர், ஏப்.28:எதிர்கால தமிழ்நாட்டிற்கான இயற்கையுடன் இணைந்த புதிய வாழ்க்கை முறை உருவாக்க வேண்டும் என தஞ்சாவூரில் நடைபெறும் நம்மாழ்வார் பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தில் முடிவு செய்யப்பட்டது. நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் சார்பில் நேற்று காலை தஞ்சாவூரில் நம்மாழ்வார் பிறந்த நாள் விழா ,கருத்தரங்கம், கண்காட்சி துவங்கியது. நம்மாழ்வார் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமை வகித்து கூறியதாவது, எதிர்கால தமிழ்நாட்டிற்கான புதிய வாழ்க்கை முறை ஒன்றை நம்மாழ்வார் வழியில் இன்றைய தலைமுறை உருவாக்கி காட்ட வேண்டிய கட்டாயத்தை காலம் கட்டளையாக பிறப்பித்துள்ளது. மக்களின் உரிமையான இறையாண்மை இன்று மக்களிடம் இல்லை.தமிழ் மக்கள் அனுபவம் சார்ந்த உணவு பழக்கம் இல்லாததால்,ரசாயன கலப்படங்கள் உணவு புதுப்புது நோய்களுக்கு வித்திட்டு உள்ளது.

குடிமைச் சமூக அதிகாரம் கொண்ட சிந்தனை முறையை இளைய சமுதாயத்திடம் நாம் வளர்த்தெடுக்க வேண்டும், அதற்கு நம்மாழ்வார் வாழ்க்கை வழிமுறையை, போராட்ட முறையை பின்பற்ற வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.  முதலாவதாக நம்மாழ்வார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இயற்கை விதைகள், ரசாயனங்கள், அன்றாட வாழ்வியலுக்கு பயன்படும் அனைத்து உணவு பொருட்கள் கண்காட்சி திடலில் வைக்கப்பட்டிருந்தன. நாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் க.பழனிதுரை தொடக்க உரையாற்றினார். உலக மக்கள் மன்ற நிர்வாகி அசோக்குமார், தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு இயக்க தலைவர் சவுந்தர்ராஜன், அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் மாசிலாமணி, மருத்துவர் மருது துரை, உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

பின்னர் புதுச்சேரி மாணவர்களின் மல்லர் கம்பம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பொறியாளர் கென்னடி பாராட்டி பேசினார். வேளாண்மையில் மகளிர் பங்களிப்பு என்ற கருத்தரங்கத்திற்கு மருத்துவர் ராதிகா மைக்கேல் தலைமை வகிக்க, பாரத் கல்வி குழும நிறுவனர் புனிதா கணேசன் முன்னிலை வகித்தார். முனைவர்கள் அகிலா கிருஷ்ணமூர்த்தி, இந்திராஅரசு, சமூக செயற்பாட்டாளர் அமுதா ரமேஷ் ஆகியோர் பேசினர்.தஞ்சாவூர் துரை. மதிவாணன் ஆகிய களப்போராளிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post எதிர்கால தமிழ்நாட்டிற்கான இயற்கையுடன் இணைந்த புதிய வாழ்க்கை முறை உருவாக்க வேண்டும்: நம்மாழ்வார் பிறந்தநாள் விழா கருத்தரங்கில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nammalhwar ,Celebration ,Thanjavur ,Nammazhwar ,Nammazhwar People's Movement ,party ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...